Thalayangam | Top Tamil News | Tamil Breaking News - தினத் தந்தி
நீண்ட நெடுங்காலமாக சர்ச்சையில் இருந்த அயோத்தி ராமர் கோவில் பிரச்சினைக்கு 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தன் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் நல்ல தீர்வை தந்தது. பா.ஜனதாவை பொருத்தமட்டில், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்பதை தங்கள் வாக்குறுதியாக சொன்னதே, இந்துக்கள் மத்தியில் அந்த கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து, தேர்தலில் வெற்றிபெற துணையாக இருந்தது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு ராமர் கோவிலை கட்ட மின்னல் வேகத்தில் பணிகள் நடந்தன. 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை 15 உறுப்பினர்களோடு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் முதல் தலைவர், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி திறம்பட வாதாடி வெற்றிபெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 93 வயதான கே.பராசுரன், வடஇந்தியாவின் நகரா கட்டிட கலையில் புகழ்பெற்ற நிபுணரான சந்திரகாந்த்பாய் சோம்புராவின் தலைமையிலான நிபுணர்களால் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி. ஆலோசனையின் பேரில் 14 மீட்டர் ஆழத்தில் அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. இந்த கோவில் கட்டுமானத்தில் இரும்போ, சாதாரண சிமெண்ட்டோ பயன்படுத்தப்படவில்லை. கருங்கற்களும், மார்பிள் கற்களும், செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன.
செங்கற்களெல்லாம் பக்தர்களால், 'ஆளுக்கு ஒரு செங்கல்' திட்டத்தின் கீழ் நன்கொடையாக கொடுக்கப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான பக்தர்களால் வழங்கப்பட்ட செங்கற்கள் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. ரூ.1,800 கோடி செலவில் 71 ஏக்கர் நிலத்தில் கட்டப்படும் இந்த கோவில் வளாகத்தில், கோவில் மட்டும் 3 ஏக்கரில் கட்டப்படுகிறது. இதுவரையில் 21 லட்சம் கனஅடி கற்கள், கோவில் கட்டுமானத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடியால் பூமி பூஜை செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கின.
மூல கருவறை இருக்கும் தரைத்தளம், முதல் தளம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது முதல் கட்டப்பணிதான். இன்னும் இரண்டாவது தளம், ஏனைய பணிகள் என இரண்டாம் கட்ட, 3-ம் கட்ட பணிகள் இருக்கின்றன. இந்த கோவிலில் 3 ராமர் சிலைகள் இருக்கும். இப்போது குழந்தை ராமர் விக்கிரகம் தரைத்தளத்தில் வைக்கப்பட்டு, வருகிற ஜனவரி 22-ந்தேதி பிரதமர் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. 27-ந்தேதி முதல் பக்தர்கள் செல்லும் வகையில் திறக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கான 600 கிலோ வெண்கல மணி தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்டது. 4.1 அடி நீளமுள்ள இந்த மணியில், ஜெய் ஸ்ரீராம் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இப்போது நாமக்கல்லில் 1,200 கிலோ எடை கொண்ட 12 வெண்கல மணிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ராமேசுவரம், கன்னியாகுமரி உள்பட பல இடங்களிலிருந்து கடல் நீரும், அனைத்து நதிகளில் இருந்து புனித தீர்த்தமும் அபிஷேகத்துக்காக ராமர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த கோவிலின் கருவறை, முன்பக்க கதவு உள்பட கோவிலிலுள்ள 44 வாசல்களுக்கும் தேவையான அலங்கார கதவுகள் மாமல்லபுரத்திலுள்ள 40 மரச்சிற்ப கலைஞர்களால் செய்யப்படுகிறது. அதிக அளவில் நன்கொடை கொடுத்தவர் ஒரு தமிழர் என்பதோடு, தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக நன்கொடை பெறப்பட்டுள்ளது. ஆக அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் தமிழகத்தின் கைவண்ணமும் இருக்கிறது என்பதில் ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை.
Comments
Post a Comment